தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

நிஷங்கன் கவிதை

Wednesday, December 10, 2008

என் உணர்வுகளும் அந்த மரமும்
..............................................................

பட்டையுதிர்ந்த அந்த மரமும்
என் மௌனங்களை
சுமந்தபடி நின்றது
தோற்ற என் உணர்வுக்குள்
அடங்கிப்போனது
அதன் உயிர்ப்பு
என் சுவாசம்
பூமியை ஸ்பரித்த போது
அதன் வேரறுந்த சத்தம்
என் செவிப்பறையை
தட்டிச்சென்றது

தேஜஸ்வினி கவிதைகள்

நீலம் பரித்த கடல்
...........................................................................................

உடல் முழுதும் பூக்கின்றன புன்னகையின் பூக்கள்
வெறுமையின் பூக்களாய்
தெறித்த கண்ணாடித் துகள்களில்
விரக்தியின் எச்சங்களே மிஞ்சுகின்றன

குருதிக்குழாய்கள் வாயடைத்து
வீரித்துப் புடைக்கின்றன
இருதயம் முழுவதும் நேசத்தழும்புகள்


ஒன்று திரட்டிக் கட்டி
ஆழ்கடலுக்குள் வீசியெறிந்த
ஞாபகப் பிணங்களை
மீண்டுமொரு முறை தோண்டியெடுத்த
நாற்றத்தில் குடல் அழுகிப்போனது


சிறிது சிறிதாய்
விஷம் கலந்து நீலம்
கடல்
அலையடங்கிப்போனது


உன் பிரிவு பற்றிய சில குறிப்புகள்
....................................................................................................

உன் பிரிவின்
நிச்சயத்தை அறிந்திருக்கிறேன்
சில வேளை
அது நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ
இருக்கலாம்


நீ விட்டுச்சென்ற
வாழ்த்துமடலும் மயிலிறகும்
மற்றும் சில ஞாபகக்குறிப்புகளும்
உன் பிரியத்தைவிடவும்
ஆழமான நேசத்தை விடவும்
என்
இருத்தலிற்கான நியாயத்தையும்
தனிமையின் அமானுஷ்யத்தையுமே
நினைக்கின்றன


உன் பிரியமே
எதையும் விட்டுவைக்காதே
எனக்காக
உன் நேசம் மற்றும்
பிரியத்தையும்………….


உன்னைப் பற்றி
...............................................................................................

ஏதாவது எழுத வேண்டும்
உன்னைப் பற்றி
உன் நினைவுகளைப் பற்றி
அது
என் நேசத்தின் எதிரொலி
என்றுகூட நீ நினைக்கலாம்
ஆனாலும்
உன் இதழ்விரித்த சிரிப்பையும்
சிந்திய வர்ணங்களையும் பற்றி
நினைக்கும்போதே
மை முடிந்து போகிறது
என் காலப்பேனாவிற்கு
.........................................................................................

நிசங்கன் கவிதைகள்

Tuesday, October 14, 2008

தொடரும் தவிப்புகள்

இரட்சித்த வீட்டில்
நீ குளித்து விட்டுப் போன சோப்பில்
உதிரும் உன் உடலின்
வாசனையை நுகர்கிறேன்
எனது துவாயில் கசியும் உன்
பிரியங்களும்
விசும்பலில் துடைத்த எனது
ஆடையும்
நேற்று மட்டும் உனதாயிருந்த
வாசனனத்திரவியங்களும்
நீ வரும் வரை நமத்துப்போன
எனது தாபங்களுக்காக
காத்திருக்கும்

வெற்றுக்காத்திருப்புகள்

புழுதிபடிந்த தெரு மதில்களுக்குப் பின்னால்
சுமையாகிவிட்ட காத்திருப்புகள்
கனத்த இரவில் விசிறப்பட்ட நட்சத்திரங்களில்
இறுகாத கைகளை இறுக்கும் போது
சத்தங்கள் மௌனிக்கத் தொடங்கும்
நாளைய சோற்றுப்பருக்கைக்கான
இன்றைய இரவில்
நுரைத்த கனவுகளும்
உலர்ந்த ஆசைகளும்
சிலந்தி வலைகளுக்கு மத்தியில்
விறைத்து போயிற்று


இளமைக் கனவுகள்

உலரும் என் இளமைக் கனவுகள்
அஸ்தமிக்குமிக்கும் சூரியனில் கறுக்கும் நிலாச்சாரல்
கனக்கும் மேகங்கள் நடுவே
நடுங்கும் என் விரல்கள்
என் நிறமற்ற இளமைக் கனவுகள்
கரையும் வர்ணங்களின்
இடையில்
நழுவித் தொங்கும்
வெறுமையாக


மரத்த மனம்

விறைத்துப் போன உணர்வுகளையும்
சபிக்கப்பட்ட மௌனத்தின் உறுப்புகளையும்
தேடி அலையும் என் விரல்கள்
விடியலின் நிறங்களும் கரைந்து போக
கனத்த மாலைகளும் புழுதியான தென்றலும்
என் உடலுக்காக காத்திருக்கும்

உடைந்த நீர்க்குடத்தில்
முளைத்த பூச்செடியைப் பார்ப்பதற்கு
ஏங்குத் கண்களை நோக்கி
கட்டெறும்புகள் படையெடுக்கும்
ஆறடி குழியுள் விழுவதற்கு முன்பும்
மரத்த முலையுடன்
சாவைத் தொலைத்துவிட்டு
சபிக்கப்பட்ட பிறவியாக
நான் உன்னுடன்

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் ஓர் நோக்கு.

Friday, September 26, 2008


சி.ரமேஷ்
............................................................................................
ஈழத்து நவீனகவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப்பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு வழிகோரியதுடன் 1958 இல் பாரிய இனக்கலவரமொன்றுக்கும் கால்கோலானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வை தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையும், சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட சுபத்திரன், பசுபதி, ஈழவாணன், வி.சிவானந்தன் பண்ணாமத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் மஹாகவி, இ.முருகையன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம் போன்ற கவிஞர்கள் சமூகநோக்கு மிக்க நவீன கவிதைகளை ஆக்கவும் வாய்ப்பளித்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தாம் வாழ்ந்த காலத்தையும், சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார்.

1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்த தா.இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிற் கல்வி பயின்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிற் பட்டதாரியானார். 1964 இல் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் இவரெழுதிய 38 கவிதைகளைத் தாங்கி “புதுமெய்க்கவிதைகள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1965 இல் “காணிக்கை” என்னும் தொகுப்பு இவரெழுதிய 31 கவிதைகளுடன் வெளிவந்தது இதனைத்தவிர “மரணத்துள் வாழ்வோம் , பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்போன்ற தொகுப்புக்களுக்கூடாகவும் அலை, புதுசு, சுவர் போன்ற சஞ்சிகைகளுக்கூடாகவும் இவரின் கவிதைகள் நன்கறியப்பட்டன.


தா.இராமலிங்கத்தின் பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாண சமூகத்தின் இயல்புநிலை மிக நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது. கட்டியதாலிக்காக வறுமைக்குள் தன்னைக் கருக்கும் மனைவி (தூக்கட்டும் தூக்கட்டும்), வயலில் எவரின் உதவியின்றி வியர்வைகக்க தனித்து உழும் உழவன் (நான், விளைநிலம்) போலி ஆசாரங்களுக்குள் கட்டுண்டு செத்தை மறைவுக்குள் செல்லாக்காசாகும் வேளாளத்திமிர (ஆசைக்குவெட்கமில்லை), சமூகக்கட்டுமானத்துக்குள் சிக்குண்டு பார்வையால் பாலியல் வன்புணர்வு செய்யும் வாலிபன் (காமம், கிழியட்டும் முக்காடு) என விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் ஒரு சமூகத்தின் யதார்த்த வாழ்வை இயல்பு நிலை பிறழாது மிகத்தத்துருபமாக எடுத்துரைக்கிறது.

ஆழமான வார்த்தை பிரமாணங்களுக்கூடாக கட்டுறும் “ஆசைக்கு சாதியில்லை” என்னும் கவிதை மேல்தட்டு வர்க்கத்தின் போலிமுகங்களையும் ஆசார அனுட்டானங்களையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறது.

“வேளாளர் குடிப்பிபிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே
மயிர் பிடிக்கும்”

என்னும் மிகச்சூட்சுமான வீரியவரிக்கட்டுமானம் பிறரில் குற்றம் காணும் மேற்சாதி ஆசார அனுபூதியைக் கட்டவிழ்த்துக்காட்டுகிறது. ஆசையால் தன்பிழையைச் சரிக்கட்டும் போலி நியாயம்

“மருந்து நல்லதென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்
என்னும் வரிக்கூடாக மிகத்துல்லியமாக வெளிப்படுகிறது ஈற்றில் எவ்வித நியாயமும் சொல்லமுடியாத அப்பட்டமான வாழ்வின் நிலையை தா.இராமலிங்கம்

“இன்பம் நுகர்ந்தேன்
என ஆசாரமுட்டையிலும், ஆசாரமுட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்”

என்னும் வரிகளுக்கூடாக வெகு இயல்பாக வெளிப்படுகிறார். வாழ்தலே கடனெனஅஞ்சி வாழ்ந்து மடியும் நடுத்தரவர்க்கத்தின் இயல்புநிலை “குஞ்சு திரளாதோ” கவிதையில் மிகத்தத்துருபமாக எடுத்துரைக்கப்படுகிறது.

“சட்டி நிறை கஞ்சி
நக்கி உணல் முடிய
நாயேன் கழிக்கின்ற காலம் மிகப்பெரிது
முந்நூறை நோக்குகிறேன்
மூன்றில் ஒன்றைப் பாய்ந்திடனோ?
கூழ்முட்டையாகிப் பாழ்பட்டுப் போகாமல்
குஞ்சு திரள்கின்ற மெய்யுடல் ஆக்கேனோ?”

பிரதேசத்துக்குரிய கருப்பொருட்களுக்கூடாக நிலைபெறும் இக்கவிதை வழக்காற்று மொழிப் பிரயோகங்களுக் கூடாகவே தன்னைக்கட்டமைக்கிறது.

தன்னுடல் பசிநீக்க வலியற்று தினமும் தன்னை சித்திரவதைப்படுத்தும் கணவனைக் கொன்ற மனைவியை சமூகநீதிக்கு முன்னால் நிறுத்தி அவள் செய்த ஆசாரப் புரட்சி சரிதான் எனக்கூறி அதனை நியாயப்படுத்தும் (தூக்கட்டும் தூக்கட்டும்) கவிதை கலாசார மரபுக்குள் பெண்படும் அவஸ்தையை கண்முன் நிறுத்துகிறது. வேலி தாண்டிய பெண்ணின் சுயம் சார்ந்த உரிமைக்குரல் இக்கவிதையெங்கும் ஈரமாய் கசிகிறது. சமூகக்கலாசாரத்தால் மறைக்கப்பட்ட பெண்ணின் மனஉணர்வுகளை முதன்முதலில் அப்பட்டமாக வெளிப்படுத்திய கவிதை இது எனலாம்.

சாதரண மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழிச் சொற்களை கவிதையின் தேவையறிந்து பயன்படுத்தியவர் தா.இராமலிங்கம் ஆவார். தேவையற்ற அடைமொழிகளுக்காகவோ, ஓசைச்சிறப்புக்காகவோ இப்பிரதேச வட்டாரச் சொற்கள் கையாளப்படாது கவிதையின் தெளிவு கருதி தா.இராமலிங்கத்தால் யாழ்ப்பாணப்பிரதேச வழக்காற்றுச் சொற்கள் கையாளப்படுகின்றன.

“ ஒளி கூரக்கூர
சூடேற ஏற
நன்றுதிறனோடு
குஞ்சு திரளுது”
(குஞ்சு திரளாதோ)

“பன்னாட்டு ஒடியற்பிட்டு
செவ்வரிசிக் கஞ்சி
உயிர்ச்சத்துப் பொருள் யாவும்
உண்டிடுறேன் இன்றுதொட்டு”
(கடைதீனி வேண்டாம்.)

இவ்வாறு தா.இராமலிங்கத்தால் கவிதையில் பயன்படுத்தப்படும் பேச்சு மொழிச்சொற்கள் உணர்வின் வெளிப்பாடாக அமைவதுடன் கவிதையின் இயல்புத்தன்மை விகாரப்படாமல் இருப்பதற்கும் வழிகோருகிறது.

குறியீடு, படிமம் என்னும் நுண்பொருள் உத்திக்கூடாக விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் பிரத்தியேக மொழி அமைவுக்குள் கட்டுருபவை இவரின் படிமங்கள் எளிமையானவை. அதேசமயம் குறுகிய எல்லைக்குட்பட்டவை கலக்கம் கவிதையில் இடம் பெறும்

“செத்த பகலின்
சடலம் எரிமூட்டி
விட்டகன்றார் விண்வெளியில்
சாம்பல் புதையுண்ட
காற்றில் மினுங்கூது”

என்னும் வரிகள் மாலைக்காட்சிக் கூடாக, மாறும் மன உணர்வின் பேதைமைகளை எடுத்துரைக்கின்றன. “தேடல், அனுபவம், செந்நா பொரிகிறது, பெருஞ் செல்வம், மனம் வருகுதோ, கழுவு தெரியும், அடைகிடக்கு” போன்ற கவிதைகள் செறிவடர்த்தி கொண்ட படிமங்களுக்கூடாக கட்டுருபவை நுண்ணிய மனவுணர்வுக் கூடாகவும், புறப்பொருட் காட்சிக் கூடாகவும் கட்டுறும் இப் படிமங்கள் நுண்ணிய தளத்துக்கு மொழியை மாற்றிச் செல்கிறது.

பொது நிலைக் கவிஞராகவும் அதே சமயம் சார்பு நிலைக் கவிஞராகவும் இனம் காணப்படும் தா. இராமலிங்கம் குறியீட்டு உத்தியை தேவையறிந்து பயன்படுத்துவதில் வல்லாளர் இவரின் கவிதைகள் பெரும்பாலும் பொது நிலைக் குறியீட்டு உத்திக் கூடாகவே தன்னை நிலைப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக அகிலத்துவ குறியீட்டை உள்வாங்கியே இவரின் கவிதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வை காட்சிப்படுத்தும் “பிரயாணம்” என்னும் கவிதை மு.தளையசிங்கம் கூறுவதைப் போல் ‘புகைவண்டி’ என்னும் குறியீட்டுக் கூடாகவே முழுச்சமூகக் கட்டமைப்பையும் காட்சிப்படுத்துகிறது. இதனைப் போன்று அகிலத்துவக் குறியீட்டு உத்தியை உள்வாங்கி “புகை, பாரச்சுமை, விளக்குமாறு என்ன செய்யும், சிறுவரம்பு, நுகர்ச்சி” முதலான கவிதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கவிதைகளில் தா.இராமலிங்கம் பயன்படுத்தும் நுண்பொருள் உத்திகள் பரந்த அளவில் மீள்வாசிப்புக்குட்படுத்தி ஆராயப்பட வேண்டிய தொன்றாகும்.

எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், முருகையன் போன்ற இலக்கிய ஆய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்ட தா.இராமலிங்கத்தின் கவிதைகள் “இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்”, “ஈழத்து நவீன கவிதை” போன்ற நூல்களில் குறிப்பளவிலேயே எடுத்துரைக்கப்படுகின்றன. இக் கவிதைகளை நவீன இலக்கிய ஆய்வாளர்கள் முழுமையான ஆய்வுக்குட்படுத்தி ஆராயப்பட வேண்டிய காலத்தின் அவசியமாகும். அவரின் கவிதைகளை தமிழுலகு நிறைந்த கண்கொண்டு விரிந்ததளத்தில் இலக்கிய ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வரை ஈழத்து நவீன கவிதை எந்நாளும் முழுமைத்துவத்தை அடையாது.

ந.சத்தியபாலன் கவிதைகள்

Friday, September 19, 2008

இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது

........................................................................................................
ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று
அப்பழுக்கற்ற பாசத்தின்
ஊற்றுக்கண்ணில் விஸம்
ஆவலாய் அணைந்த மழலை
மடியிலே சுருள்கிறது பிணமாய்
பால் கட்டிப்போய்
தாளாத வலியெடுக்கின்றன மார்புகள்
அனைத்தினாலும் கைவிடப்பட்ட
மனிதன்
திசையிழந்து அலைந்தலைந்து
இடுகின்ற ஓலம் வியாபிக்கிறது
எங்கும்

கூத்து

.......................................................................................................................
மேலும் ஒரு விளக்கு
சடரவிந்து மெல்லிய சாம்பர்
வெண்கோடாய்ப் புகை நெளிந்தது
சௌகர்யமாய் அமர்நடது கொண்டது
இருள்
பணி முடிந்த திருப்தியுடன்
வெளியேறிற்றுப் பேய்க்காற்று
பயணங்கள் திசையிழந்தன
சக்கரங்கள்; மெல்லென ஓய்ந்தன
பாடல்கள் இடைநிறுத்தப்பட்டன
மேலும் மேலும் வேறு இடங்களில்
விளக்குகள் அணைந்தன
கோரப் பற்கள் துருத்திய வாயோடு
குதித்தாடத் தொடங்கியது இருள்
சாமப்பொழுதில்
தொலைவுகளில் ஓங்கியொலித்துப் பின்
ஓய்தடங்கிப் போயின ஓலங்கள்
நோயோடு புலர்ந்த காலையில்
தெருக்களும் நிலங்களும்
கழுவப்பட்டிருந்தன
சுவர்கள் புதுவர்ணம் தீட்டப்பட்டிருந்தன
குளித்துப் புத்தாடையணிந்து
போய்க்கொண்டிருந்தோரின்
கவனத்திற்குத் தப்பிய கால்விரல்
இறைகளுக்குள்
உலர்ந்து போயிருந்தது
இரத்தம்

தன்னுலகு

...............................................................................
தொட்டி விளிம்புவரை நிரம்பி
தழும்புகிறது நீர்
சிறிதாயெனிலும் ஓர் அழுத்தம்
நேர்கையில்
வெளியேறிய ரகசியமாய்
சுவர் தழுவி வழிகிறது
வீசும் சிறு காற்றில் சிற்றலை
நெளிவுகளோடு
நர்த்தனமிடுகிறது
தொட்டியின் அடிப்புறப் பாசியின் பச்சையை
தனது நிறமெனக் காட்டிட முனைகிறது
வெய்யிற் பொழுதில் சூடாகியும்
நிரவொளி வருடலிற் குளிருற்றும்
வாழ்வொன்றியற்றிட முயல்கிறது
வெய்யிலோடு நாள் தோறும்
தான் ஆவியாவதுணராமல்

அர்த்தம்

................................................................................
சென்ற திசையிலேயே
திகைத்தலைந்தன சில
வில்லங்கமாய்ப் பிடித்து
அமர்த்தப்பட்டன சில
தவறான இடத்தில்
அவமதிக்கப்பட்டு
முகஞ்சிவந்து திரும்பின சில
உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச
எனது சொற்களின் கதி
இப்படியாயிற்று
நூற்று ஓராவது தடவையும்

காற்றோடு கலப்போம்

................................................................................
உள்ளெரியும் பெருந் தீ உனக்கும்
எனக்கும் பொது
நீ தனி நானும் தனி
எரிதல் இருவர்க்கும் பொது
தணிக்க வேண்டிய நீ தனி நானும் தனி
தாகத்தில் வறண்டு தீயினில் எரிந்து
பொசுங்கி நீறாவோம்
உனதும் எனதும் சாம்பல் காற்றுக்குப்
பொது
காற்றள்ளிப் போகட்டும்
உன்னையும் என்னையும் ஒன்றாய்

இன்னும் ஒரு நாள்

................................................................................
கண்களை இருள் கவ்விய ஒரு சில
கணங்களுக்குள்
அது நிகழ்ந்தது
குளறலாய் எழுந்த ஓலம் வெளியிற்
கலந்து கரைந்தது
வீதியிற் சிந்திய குருதி பரவி
உறைந்தது
எல்லாம் முடிந்ததெனக் கிளர்ந்த
எக்களிப்பின் முகத்தில்
புழுதியை வாரியள்ளிச் சொரிந்தபடி
விரைந்தது காற்று
வரலாற்றின் பதிவேட்டில்
மேலும் ஒரு பக்கம் புரண்டது
மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று
பறவைகள் இசைத்தன
நாள் நடந்தது
மதியம் மாலை எனப் பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று
------------------------------------------------