தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

ந.சத்தியபாலன் கவிதைகள்

Friday, September 19, 2008

இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது

........................................................................................................
ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று
அப்பழுக்கற்ற பாசத்தின்
ஊற்றுக்கண்ணில் விஸம்
ஆவலாய் அணைந்த மழலை
மடியிலே சுருள்கிறது பிணமாய்
பால் கட்டிப்போய்
தாளாத வலியெடுக்கின்றன மார்புகள்
அனைத்தினாலும் கைவிடப்பட்ட
மனிதன்
திசையிழந்து அலைந்தலைந்து
இடுகின்ற ஓலம் வியாபிக்கிறது
எங்கும்

கூத்து

.......................................................................................................................
மேலும் ஒரு விளக்கு
சடரவிந்து மெல்லிய சாம்பர்
வெண்கோடாய்ப் புகை நெளிந்தது
சௌகர்யமாய் அமர்நடது கொண்டது
இருள்
பணி முடிந்த திருப்தியுடன்
வெளியேறிற்றுப் பேய்க்காற்று
பயணங்கள் திசையிழந்தன
சக்கரங்கள்; மெல்லென ஓய்ந்தன
பாடல்கள் இடைநிறுத்தப்பட்டன
மேலும் மேலும் வேறு இடங்களில்
விளக்குகள் அணைந்தன
கோரப் பற்கள் துருத்திய வாயோடு
குதித்தாடத் தொடங்கியது இருள்
சாமப்பொழுதில்
தொலைவுகளில் ஓங்கியொலித்துப் பின்
ஓய்தடங்கிப் போயின ஓலங்கள்
நோயோடு புலர்ந்த காலையில்
தெருக்களும் நிலங்களும்
கழுவப்பட்டிருந்தன
சுவர்கள் புதுவர்ணம் தீட்டப்பட்டிருந்தன
குளித்துப் புத்தாடையணிந்து
போய்க்கொண்டிருந்தோரின்
கவனத்திற்குத் தப்பிய கால்விரல்
இறைகளுக்குள்
உலர்ந்து போயிருந்தது
இரத்தம்

தன்னுலகு

...............................................................................
தொட்டி விளிம்புவரை நிரம்பி
தழும்புகிறது நீர்
சிறிதாயெனிலும் ஓர் அழுத்தம்
நேர்கையில்
வெளியேறிய ரகசியமாய்
சுவர் தழுவி வழிகிறது
வீசும் சிறு காற்றில் சிற்றலை
நெளிவுகளோடு
நர்த்தனமிடுகிறது
தொட்டியின் அடிப்புறப் பாசியின் பச்சையை
தனது நிறமெனக் காட்டிட முனைகிறது
வெய்யிற் பொழுதில் சூடாகியும்
நிரவொளி வருடலிற் குளிருற்றும்
வாழ்வொன்றியற்றிட முயல்கிறது
வெய்யிலோடு நாள் தோறும்
தான் ஆவியாவதுணராமல்

அர்த்தம்

................................................................................
சென்ற திசையிலேயே
திகைத்தலைந்தன சில
வில்லங்கமாய்ப் பிடித்து
அமர்த்தப்பட்டன சில
தவறான இடத்தில்
அவமதிக்கப்பட்டு
முகஞ்சிவந்து திரும்பின சில
உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச
எனது சொற்களின் கதி
இப்படியாயிற்று
நூற்று ஓராவது தடவையும்

காற்றோடு கலப்போம்

................................................................................
உள்ளெரியும் பெருந் தீ உனக்கும்
எனக்கும் பொது
நீ தனி நானும் தனி
எரிதல் இருவர்க்கும் பொது
தணிக்க வேண்டிய நீ தனி நானும் தனி
தாகத்தில் வறண்டு தீயினில் எரிந்து
பொசுங்கி நீறாவோம்
உனதும் எனதும் சாம்பல் காற்றுக்குப்
பொது
காற்றள்ளிப் போகட்டும்
உன்னையும் என்னையும் ஒன்றாய்

இன்னும் ஒரு நாள்

................................................................................
கண்களை இருள் கவ்விய ஒரு சில
கணங்களுக்குள்
அது நிகழ்ந்தது
குளறலாய் எழுந்த ஓலம் வெளியிற்
கலந்து கரைந்தது
வீதியிற் சிந்திய குருதி பரவி
உறைந்தது
எல்லாம் முடிந்ததெனக் கிளர்ந்த
எக்களிப்பின் முகத்தில்
புழுதியை வாரியள்ளிச் சொரிந்தபடி
விரைந்தது காற்று
வரலாற்றின் பதிவேட்டில்
மேலும் ஒரு பக்கம் புரண்டது
மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று
பறவைகள் இசைத்தன
நாள் நடந்தது
மதியம் மாலை எனப் பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று
------------------------------------------------

0 comments: